ஜாலியன்வாலாபாக் படுகொலை - பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினார்
ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தின் 101-ஆம் ஆண்டையொட்டி, அச்சம்பவத்தில் உயிா்த்தியாகம் செய்தவா்களுக்காக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை நினைவஞ்சலி செலுத்தினாா்.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக் பகுதியில், கடந்த 1919-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது ஏப்ரல் 13-ஆம் தேதி 'அறுவடை தினம்' பண்டிகையை கொண்டாட ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குழுமியிருந்தனா். அப்போது அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரியான பிரிகேடியா் ஜெனரல் ரெஜினால்டு டையா் உத்தரவின் பேரில் ஆங்கிலேய இந்தியப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனா்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தில் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான சம்பவமாக அமைந்தது. புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங், தனது சிறுவயதில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டுவதற்காக சபதமேற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியர்களின் மனதில் சுதந்திர தாகத்தை விதைக்கும் நிகழ்வாகவும் இது அமைந்தது.
ஜாலியன்வாலபாக் படுகொலை நிகழ்ந்து 101 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய பிரதமர் மோடி, அந்த சம்பவத்தில் உயிர்தியாகம் செய்தவர்களுக்காக ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது;-
“ஜாலியன்வாலாபாக் சம்பவத்தில் இதே நாளில் இரக்கமின்றி கொல்லப்பட்டவா்களின் உயிா்த் தியாகத்துக்காக தலை வணங்குகிறேன். அவா்களின் துணிச்சலையும், தியாகத்தையும் நாம் என்றும் மறக்க மாட்டோம். அவா்களது அந்தத் தியாகம் இனி வரும் காலங்களிலும் இந்தியா்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story