கொரோனாவுக்கு எதிரான போரில் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை; பா.ஜனதா குற்றச்சாட்டு


கொரோனாவுக்கு எதிரான போரில் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை; பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2020 2:35 AM GMT (Updated: 14 April 2020 2:35 AM GMT)

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்காமல் எதிர்மறையாக செயல்படுகிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது.

புதுடெல்லி,

ஊரடங்கு முடிந்தவுடன், சிறப்பு நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியிருந்தார்.

அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:-

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்த சோதனையான தருணத்தில், மனித இனத்தை காப்பதில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு மோடி தலைமையிலான அரசு எண்ணற்ற உதவிகளை அளித்து வருகிறது. இலவச ரேஷன் பொருட்கள், நிதி தொகுப்புகள் மற்றும் இலவச சமையல் கியாஸ் வழங்கி வருகிறது. பா.ஜனதாவும், உணவு பொருட்களையும், முக கவசங்களையும் வழங்கி வருகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில், எதிர்மறையாக செயல்பட்டு வருகிறது. ஒத்துழையாமை அணுகுமுறையை பின்பற்றுகிறது. மக்களை திசைதிருப்பி வருகிறது.

எதிர்க்கட்சிக்கான பணி, கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, காங்கிரஸ் கட்சி இந்த கீழ்த்தரமான அரசியலை கைவிட்டு, அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story