கொரோனா அச்சம்: கேம் விளையாடிய போது தொடர்ந்து இருமிய நண்பனை துப்பக்கியால் சுட்ட நண்பர்


கொரோனா அச்சம்: கேம் விளையாடிய போது தொடர்ந்து இருமிய நண்பனை துப்பக்கியால் சுட்ட நண்பர்
x
தினத்தந்தி 15 April 2020 12:36 PM GMT (Updated: 15 April 2020 12:36 PM GMT)

கொரோனா அச்சம் காரணமாக கேம் விளையாடிய போது தொடர்ந்து இருமிய நண்பனை துப்பக்கியால் சுட்ட மற்றொரு நண்பர்



புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கொரானாவால் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் சேர்த்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள் என மருத்துவ சிகிச்சையில் இதுவரை கொரோனாவில் இருந்து ஆயிரத்து 306 பேர் (1,306) குணமடைந்துள்ளதாகவும், மேலும் 9 ஆயிரத்து 756 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மராட்டியம் முதலிடத்திலும், டெல்லி  2 ஆம் இடத்திலும், தமிழ்நாடு 3 ஆம் இடத்திலும் உள்ளன.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், செல்போனில் பரவும் வதந்தி உள்ளிட்டவற்றால் கொரோனா தொடர்பான அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

தலைநகர் டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தயாநகர் என்ற இடத்தில் கொரோனா அச்சம் காரணமாக நண்பனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்து உள்ளது துப்பாக்கிச்சூடு வரைக்கும் சென்றுள்ளது.  பிரவீஷ் (24) என்பவர் தனது நண்பர்கள் உடன் நேற்றிரவு செல்போனில் கேம் விளையாடியுள்ளார்.

அப்போது, அவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருக்க சக நண்பரான ஜெய்வீர் என்பவர் கோபம் அடைந்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடிக்க, திடீரென ஜெய்வீர் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு பிரவீஷை நோக்கி சுட்டுள்ளார்.

துப்பாக்கிக் குண்டு பிரவீஷின் காலில் துளைக்க, அவர் வலியால் அலறியுள்ளார், துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு கூட, ஜெய்வீர் தப்பி ஓடியுள்ளார். உடனே, பிரவீஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்வீரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story