விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி


விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 April 2020 10:06 AM GMT (Updated: 17 April 2020 10:06 AM GMT)

விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. 

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அவர் கூறும்பொழுது,  வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.  சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. 

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை மற்றும் ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. உலகிலேயே ஜி.டி.பி. வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜி20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.  வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். 

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி,  ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்புகள் பணப்புழக்கத்தை பெரிதும் மேம்படுத்தும்; கடன் வழங்குவதை அதிகரிக்கும் என்றார். மேலும், சிறு-குறு வணிகங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்” என்றார். 


Next Story