யு.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு? மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் விளக்கம்


யு.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு? மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் விளக்கம்
x
தினத்தந்தி 19 April 2020 2:04 AM GMT (Updated: 2020-04-19T07:34:29+05:30)

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு பற்றி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு (பிரிலிமினரி), மே மாதம் 30-ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தயாராகி வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

இதுபற்றி மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில், “எப்போது யு.பி.எஸ்.சி.யின் ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வு நடத்தப்படும், எப்போது முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்று கேள்விகள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது இயல்பாகவே எதையும் நடத்த முடியாத சூழல் உள்ளது. ஊரடங்குக்கு பிந்தைய நிலைமை குறித்து யு.பி.எஸ்.சி. ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. எனவே இது தொடர்பாக போதுமான நேரம் கொடுத்து, புதிய தேதிகள் அறிவிக்கப்படும்” என கூறினார்.

இதுபற்றி மே 3-ந்தேதிக்கு பின்னர் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.  எனவே யு.பி.எஸ்.சி. நடத்த இருந்த நேர்முகத்தேர்வும், முதல் நிலை தேர்வும் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story