வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களில் இருந்து வெளியேறக்கூடாது; உள்துறை அமைச்சகம்


வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களில் இருந்து வெளியேறக்கூடாது; உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 19 April 2020 10:51 AM GMT (Updated: 19 April 2020 10:51 AM GMT)

வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களில் இருந்து வெளியேறக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (20 ஆம் தேதி) முதல், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில், கட்டுமானப்பணிகள், தொழிற்சாலை பணிகள் மேற்கொள்ள அனுமதி உள்ளிட்ட சில  தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது.  

இந்த நிலையில்,  ஊரடங்கால் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல், வெளி மாநிலங்களில் முகாம்களில் தங்கியுள்ள  தொழிலாளர்கள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

வெளி மாநில தொழிலாளர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் உள்ள அதிகாரிகளிடம்  பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு உகந்த வேலைகளை அடையாளம் கண்டு வழங்கும் பணி உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் போது உரிய சுகாதார விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும்,  பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உணவு வசதி வழங்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story