கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கையூட்டுகிறது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கையூட்டுகிறது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 24 April 2020 11:03 AM GMT (Updated: 24 April 2020 11:03 AM GMT)

கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு  இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா பாதிப்பில் இருந்து மீள பலனளிக்கும் என்று பரவலாக வலியுறுத்தப்படுகிறது. 

கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதன்மூலம் டெல்லியில் 4 நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல் மந்திரி  அரவிந்த் கெஜ்ரிவால்  காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- கடந்த சில நாட்களில், எல்.என்.ஜே.பி  மருத்துவமனையில் 4 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை அளிக்கப்பட்டது. இப்போது வரை அதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் உள்ள தீவிர நோயாளிகளில் குறிப்பிட்ட சிலருக்கு பிளாஸ்மா சோதனையை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த 2-3 நாட்களில், நாங்கள் அதிகமான சோதனைகளை நடத்துவோம். பின்னர் அனைத்து தீவிர நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சையை அளிப்பதற்கு அடுத்த வாரம் அனுமதி பெறுவோம். எனவே கொரோனாவில் இருந்து மீண்ட மக்கள், ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்” என்றார். 

Next Story