கொரோனா தடுப்பு பணிகள்; இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதல் நிதியுதவி அறிவிப்பு


கொரோனா தடுப்பு பணிகள்; இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதல் நிதியுதவி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 April 2020 6:44 AM GMT (Updated: 30 April 2020 6:44 AM GMT)

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,074 ஆக உள்ளது.  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது.  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி பரவலை பெருமளவில் குறைத்துள்ளது. பிற தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா வைரசை எதிர்கொள்ள மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6ந்தேதி ரூ.21.75 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.  இதனால் மொத்தம் ரூ.44.25 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறும்பொழுது, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு இந்த கூடுதல் நிதியானது ஆதரவாக இருக்கும்.  இந்த உதவியானது, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான மற்றும் உறுதியான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும் என்று அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, கொரோனா தொற்று பாதித்தோரை கவனித்து கொள்வது, அத்தியாவசிய பொது சுகாதார தகவல்களை சமூகத்தினரிடம் எடுத்து செல்வது மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியாவுக்கு இந்த உதவி பயனளிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story