ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது; 636 கி.மீ. தொலைவில் தெளிவாக தெரிந்த இமயமலை


ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது; 636 கி.மீ. தொலைவில் தெளிவாக தெரிந்த இமயமலை
x
தினத்தந்தி 1 May 2020 7:59 AM IST (Updated: 1 May 2020 7:59 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் காற்று மாசுபாடு குறைந்து, உத்தர பிரதேசத்தின் சஹரான்பூரில் தெளிவாக தெரிந்த இமயமலையை மக்கள் படம் பிடித்து வருகின்றனர்.

சஹரான்பூர்,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  முதலில் கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு ஏப்ரல் 14ந்தேதி வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு அமலில் இருந்தது.  பின்னர் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், ஊரடங்கு வரும் 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஊரடங்கால் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை.  அவற்றின் கழிவுகள் வெளியேற்ற அளவும் குறைந்தது.  இதனால் நீர் நிலைகள் தூய்மையடைந்தன.  கங்கை நீர் தெளிவானது.  இதேபோன்று வாகன போக்குவரத்தும் பெருமளவில் குறைந்தன.  காற்றில் கலந்த நச்சு வாயுக்களின் அளவும் குறைந்தது.

இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. காற்று மாசு குறைவால், பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சி ஜலந்தர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிந்தது.  சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு இந்த பனிமலை தெரிந்துள்ளது.

இதனை ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

தொடர்ந்து காற்று மாசுபாடு அளவான காற்று தர குறியீடு 50க்கும் குறைவாக சென்ற நிலையில், உத்தர பிரதேசத்தின் சஹரான்பூரில் இருந்து 636 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பனியடர்ந்த இமயமலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் தெளிவாக தெரிய தொடங்கியுள்ளது.

இதனை அரசு ஊழியர் மற்றும் புகைப்பட கலைஞரான துஷ்யந்த் குமார் என்பவர் தனது வீட்டின் முகப்பு பகுதியில் இருந்தபடி தன்னுடைய கேமிராவில் படம் பிடித்துள்ளார்.  இவை இமயமலையின் உட்புறம் அமைந்த பந்தர்பூஞ்ச் மற்றும் கங்கோத்ரி மலை சிகரங்களாகும்.

Next Story