காஷ்மீர் முதல் குமரி வரை போர் விமானங்கள் பறக்க ஏற்பாடு - கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது நாளை ஹெலிகாப்டர்கள் மலர் தூவும்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும்வகையில், கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது நாளை ஹெலிகாப்டர்கள் மலர் தூவும். காஷ்மீர் முதல் குமரிவரை போர் விமானங்கள் பறக்கும்.
புதுடெல்லி,
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதூரியா ஆகியோர் புடைசூழ அவர் பேட்டி அளித்தார்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கொரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர்.
நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் ராணுவம் உறுதியாக நிற்கிறது. அவர்களுக்கு நன்றி செலுத்தும்வகையில், 3-ந் தேதி (நாளை) மாலை, இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து செல்லும்.
அதே நேரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது கடற்படை ஹெலிகாப்டர்கள் மலர் தூவும்.
கொரோனா போர் வீரர்களுக்கு நன்றி செலுத்த கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்பு நடத்தும். கப்பல்கள் வண்ண விளக்கொளியில் மிளிரும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா ஆஸ்பத்திரிகள் முன்பு ராணுவம் சார்பில் பேண்ட் வாத்தியம் இசைக்கப்படும். இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை உயிரியல் போராக கருதுவது சரியல்ல என்று பிபின் ராவத் கூறினார். கொரோனாவால், ராணுவத்தின் பணி பாதிக்கப்படவில்லை, இனிமேலும் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story