தமிழகத்தில் 12 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள (ஹாட்ஸ்பாட்) மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், சுமாரான பாதிப்பு உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், மத்திய மந்திரிசபை செயலாளர் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு, குணம் அடைந்தோர் எண்ணிக்கை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் மாவட்டங்கள் மீண்டும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு எங்கெல்லாம் இரு மடங்கு ஆகி இருக்கிறது மற்றும் கண்காணிப்பு, குணம் அடைந்தோர் எண்ணிக்கை மற்றும் சோதனைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் வாரந்திர அடிப்படையில் மீண்டும் வகைப்படுத்தி இருக்கிறது. அதன்படி 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், புனே, ஆமதாபாத் போன்ற பெரு நகரங்கள் சிவப்பு மண்டலத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிவப்பு மண்டத்தில் 28 நாட்களும், ஆரஞ்சு மண்டலத்தில் தொடர்ந்து 14 நாட்களும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றால் அவை பச்சை மண்டலமாக இதுவரை வகைப்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆந்திராவில் 5 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலத்திலும் இடம்பெற்று இருக்கின்றன.
தெலுங்கானாவில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 18 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 9 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும், மராட்டியத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதுச்சேரி, அசாம், இமாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் சிவப்பு மண்டலம் இல்லை. இப்படி பல்வேறு மாநிலங்களும் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மாவட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநகராட்சிகள் அல்லது நகராட்சிகள் மற்றும் பிற பகுதிகள் இருந்தால் அவற்றை தனி பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்ளலாம். சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்கி கொரோனா பரவல் சங்கிலி தொற்றை உடைக்க வேண்டும். அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story