1200 வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல் ரெயில் சேவை தொடங்கியது
1200 வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல் ரெயில் சேவை தொடங்கியது. தெலுங்கானாவிலிருந்து ரெயில் புறப்பட்டது.
ஐதராபாத்
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சுற்றுலா சென்று இருந்தவர்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை.
இந்தநிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதால், வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும், உரிய நடைமுறைகளின்படி மாநில அரசுகள் அவர்களை பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடந்த புதன்கிழமை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், பிற மாநிலங்களில் உள்ள தங்கள் மாநிலத்தவர்களை திரும்ப அழைக்கவும் பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. பஸ்களில் அனுப்பி வைப்பது சிரமம் என்பதால், சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று தெலுங்கானா, பஞ்சாப், பீகார், மராட்டியம், கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
அதை ஏற்றுக் கொண்ட உள்துறை அமைச்சகம், வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில்களை இயக்குமாறு ரெயில்வே அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது. அதன்பேரில் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நேற்று முதல் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுத்தது.
அதன்படி தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி-ஜார்கண்ட் மாநிலம் ஹாதியா, மத்தியபிரதேச மாநிலம் நாசிக்- உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, கேரள மாநிலம் ஆலுவா-ஒடிசா மாநிலம் புவனேசுவரம், நாசிக்-பீகார் மாநிலம் பாட்னா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- பாட்னா, கோட்டா-ஹாதியா இடையே தலா ஒரு ரெயில் வீதம் 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரெயில்கள் வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் என்றும், பயணிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் சிறப்பு ரெயில் தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளியில் இருந்து புறப்பட்டது. 1,200 பயணிகளை ஏற்றி கொண்ட 24 பெட்டிகளை கொண்ட ரயில் கிழக்கு ஜார்கண்ட் மாநிலத்திற்கு நிற்காமல் பயணிக்கிறது.
ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, பயணிகள் அனைவரும் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுக்காக பரிசோதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் அனைவரும் ஐதராபாத் நகரில் உள்ள ஒரு சிறந்த பொறியியல் பள்ளியான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரிந்தனர்.
72 இருக்கைகள் கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் 54 பேர்பயணம் மேற்கொண்டு உள்ளனர். பொதுப்பெட்டியில்2 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். படுக்கை வசதி கொண்டபெட்டியில் மத்திய படுக்கை பயன்படுத்தப்படவில்லை.
Related Tags :
Next Story