வட மாநிலங்களில் ரூ.700 கோடி மதுபானம் தேக்கம்; 8 லட்சம் லிட்டர் பீர் கீழே கொட்டப்படும் அவலம்


வட மாநிலங்களில் ரூ.700 கோடி மதுபானம் தேக்கம்; 8 லட்சம் லிட்டர் பீர் கீழே கொட்டப்படும் அவலம்
x
தினத்தந்தி 4 May 2020 2:30 AM IST (Updated: 4 May 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

வடமாநிலங்களில் ரூ.700 கோடி மதிப்புள்ள மதுபானம் தேக்கம் அடைந்துள்ளது. 8 லட்சம் லிட்டர் பீர் கீழே கொட்டப்படும் அவலம் நேர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியை தவிர்த்த இதர வடமாநிலங்களில் 12 லட்சம் பெட்டிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் தேங்கிக் கிடக்கிறது. இதன் மதிப்பு ரூ.700 கோடி ஆகும்.

இதுகுறித்து இந்திய மதுபான நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைமை இயக்குனர் வினோத் கிரி கூறியதாவது:-

இந்த மதுபானங்களை கடந்த நிதியாண்டுடன் விற்று காலி செய்திருக்க வேண்டும். ஆனால், மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டதால், காலி செய்ய முடியவில்லை. நடப்பு நிதியாண்டு பிறந்து விட்டதால், இந்த பழைய கையிருப்பை, மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்றுத்தான் விற்க முடியும். தற்போதும் ஊரடங்கு நீடிப்பதால், எப்போது அனுமதி கிடைத்து விற்கப்போகிறோம் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், நாடு முழுவதும் சுமார் 250 மது ஆலைகளில் 8 லட்சம் லிட்டர் பிரெஷ் பீர் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து மது உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 

பாட்டில் பீரை போலின்றி, பிரெஷ் பீரின் ஆயுட்காலம் மிகக்குறைவு. ஊரடங்கால் மது ஆலைகளை மூடி இருப்பதால் இவற்றை விற்க முடியவில்லை. இவை கெட்டுப்போகாமல் இருக்க குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். இதற்கு மின்சார செலவு ஆகும். மின்சாரம் செலவழிக்க மனமில்லாமல், அரியானா மாநிலத்தில் சில ஆலைகளில் பீரை கீழே கொட்டி விட்டனர். இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மற்றவர்களும் கீழே கொட்டும் அவலம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story