கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி
கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து, போர் விமானங்கள் விண்ணில் அணிவகுத்து பறந்தன. ஹெலிகாப்டர்கள் ஆஸ்பத்திரிகள் மீது பூ மழை பொழிந்தன. இதனால் டாக்டர்கள், செவிலியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாடு தொடுத்துள்ள போரில், தங்களது இன்னுயிரைக்கூட துச்சமாக கருதி, முன்நின்று போராடி வருகிறவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், போலீஸ் துறையினர் ஆவார்கள். அவர்களில் பலரும் இந்த போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று, காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் போர் விமானங்கள் வானில் அணிவகுத்து செல்லும்; போர் கப்பல்களில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சப்படும், ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டர்கள் பூமழை பொழியும் என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்தார்.
டெல்லியில் கோலாகலம்
அதன்படி டெல்லியில் ராஜபாதையில் தொடங்கி தலைநகர் முழுவதும் சுகோய்-30 எம்.கே.ஐ., மிக்-29 மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் வானில் அணிவகுத்து பறந்தன. காலை 11 மணிக்கு தொடங்கி சுமார் அரை மணி நேரம் இப்படி பறந்தன.
முன்னதாக டெல்லியில் தேசிய போலீஸ் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அந்த நினைவுச்சின்னம் மீது ராணுவ ஹெலிகாப்டர் பூவிதழ்களை தூவின.
மும்பை, சென்னை, கோவை, ஜெய்ப்பூர், ஆமதாபாத், கவுகாத்தி, பாட்னா, லக்னோ, ஸ்ரீநகர், சண்டிகார், ஜெய்ப்பூர், போபால், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் மீதும் போர் விமானங்கள் அணிவகுத்து பறந்தன.
பூமழை பொழிந்தன
டெல்லியில் சர் கங்காராம் ஆஸ்பத்திரி, ராஜீவ் காந்தி சிறப்பு ஆஸ்பத்திரி, தீனதயாள் உபாத்யாய் ஆஸ்பத்திரி, மும்பையில் மன்னர் எட்வர்டு நினைவு ஆஸ்பத்திரி, கஸ்தூரிபா ஆஸ்பத்திரி மற்றும் ஷில்லாங், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும் முக்கிய ஆஸ்பத்திரிகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்து பூமழை பொழிந்தன.
ஊரடங்கால் வாகனங்கள் ஓடாததாலும், தொழிற்சாலைகள் முடங்கி உள்ளதாலும் காற்று மாசு குறைந்து காணப்பட்டதால் இதை மக்களால் வெகுதூரத்தில் இருந்தும் பார்க்க முடிந்தது.
போர்க்கப்பல்கள் ஒளிவெள்ளம் பாய்ச்சின
மாலையில் கிழக்கு கடற்படை கட்டளை மையம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை மையம் சார்பில் மும்பை உள்ளிட்ட முன்னணி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல்களை விளக்கேற்றி ஒளிரச்செய்தது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
குறிப்பாக மும்பையில் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து இரவு 7.30 மணி முதல் 11.59 மணி வரையில் 5 போர்க்கப்பல்கள் ஒளியை ஒளிரச்செய்தன. கோவாவில் கடற்படை விமான தள ஓடுபாதையில் கடற்படையினர் மனித சங்கிலியை அணிவகுத்து காட்டினர். கிழக்கு கடற்படை கட்டளை மையம் விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணி தொடங்கி நள்ளிரவு வரையில் 2 போர்க்கப்பல்கள் மூலம் ஒளிவெள்ளம் பாய்ச்சினர்.
டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி
முப்படைகளின் செயல்கள், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்நின்று போராடுகிற டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும், போலீஸ் துறையினருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இன்னும் ஊக்கத்துடன் போராடும் உத்வேகத்தையும் அளிப்பதாக அமைந்தது.
ராஜ்நாத் சிங்
இதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார்.அவற்றில் அவர், “கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்னணியில் நின்று போராடுகிற மருத்துவ பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு ஆயுதப்படைகளின் மரியாதையை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக ஆயுதப்படைகளுக்கு பாராட்டுகள். ஒட்டுமொத்த தேசமும் இந்த சவாலான நேரத்தில் ஒன்றுபட்டு நிற்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் முன்னணியில் நின்று போராடுகிறவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்” என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story