வெளிமாநில தொழிலாளர்களிடம் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை -ரயில்வே நிர்வாகம்
வெளிமாநில தொழிலாளர்களிடம் ரயில் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சுற்றுலா சென்று இருந்தவர்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. தற்போது மீண்டும் ஊரடங்கு வருகிற 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .
இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்திரும்ப மத்திய அரசு சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக கூறப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொழிலாளர்களின் செலவை காங்கிரசே ஏற்கும் என கூறி உள்ளது.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 'நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 34 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு அதனடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ரயிலிலும் பயணிகளுக்கு இடையே காலியான இருக்கைகள் உள்ளன.
இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது
ரயில்களில் தொழிலாளர்கள் பயணிப்பதற்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்தளிக்கின்றன. ரயில்வேயின் மொத்த செலவில் 15 சதவீதம் மட்டும் மாநில அரசிடம் இருந்து பெறப்படுகிறது. எஞ்சிய 85 சதவீத கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. இதில், தொழிலாளர்களுக்கு டிக்கெட் விற்கப்படுவதில்லை. மாநிலங்கள் வழங்கிய பட்டியல்களின் அடிப்படையில் ரயில்களில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்' என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story