பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பொதுத்தேர்தல் நடத்த மத்திய அரசு கடும் எதிர்ப்பு


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பொதுத்தேர்தல் நடத்த மத்திய அரசு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 May 2020 5:12 PM IST (Updated: 4 May 2020 5:12 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளான கில்ஜிட், பால்டிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்த மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டது. அதில் லடாக் யூனியன் பிரதேசத்தில் லே, கார்கில் மாவட்டங்கள் இடம்பெறும். இதில் கார்கில் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் கில்ஜிட், பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் எனவும் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளை மத்திய அரசு எந்த நேரத்திலும் கைப்பற்றும் என்கிற பேச்சு அடிபட்டது. ஆனால் அப்படியான எந்த ஒரு திட்டமும் இல்லை என்று மத்திய அரசும் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் கில்ஜிட் - பால்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தல்களை நடத்தலாம் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கடந்த 30 ந்தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.கில்ஜிட்-பால்டிஸ்தானில் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது, 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கில்ஜிட், பால்டிஸ்தான் உள்ளிட்ட அனைத்து காஷ்மீரின் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறது. அந்த பகுதியில் பாகிஸ்தானுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. ஆகையால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story