எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு ‘சீல்’: தலைமை காவலருக்கு கொரோனா தொற்று


எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு ‘சீல்’: தலைமை காவலருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 May 2020 4:30 AM IST (Updated: 5 May 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பி.எஸ்.எப். தலைமையகத்தில் பணிபுரியும் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தலைமையகத்தின் 2 தளங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சீனாவில் உருவான கொரோனா முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகமாக தாக்கும் என கூறப்பட்ட நிலையில், அந்த வைரஸ் உடல் தகுதி பெற்ற பலரையும் நோய்த் தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பெரிய துணை ராணுவ படையான சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) தலைமையகத்தில் அதிகாரி ஒருவரின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்ததால், தலைமையகம் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கிடையே மற்ற ராணுவ பிரிவினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இந்த நிலையில் டெல்லி லோதி சாலையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 8 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் அவர் பணியாற்றி வருகிறார். கடந்த 1-ந் தேதி கடைசியாக அவர் அலுவலகத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போதே அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கட்டிடத்தின் அனைத்து தளங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. இதனையடுத்து தலைமையகத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளம் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை பி.எஸ்.எப். வீரர்களில் 50-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story