வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களில் செய்தித்தாள்களின் நகல்களை பகிர்வது சட்டவிரோதம்; ஐ.என்.எஸ். எச்சரிக்கை


வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களில் செய்தித்தாள்களின் நகல்களை பகிர்வது சட்டவிரோதம்; ஐ.என்.எஸ். எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 1:01 PM IST (Updated: 5 May 2020 1:01 PM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களில் செய்தித்தாள்களின் பி.டி.எப். வடிவிலான நகல்களை பகிர்வது சட்டவிரோதம் என ஐ.என்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பல்வேறு நிறுவனங்கள் இயங்காமல் உள்ளன.  இவற்றில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான பத்திரிகை துறை செயல்பட்டு வருகிறது.  எனினும், செய்தித்தாள் நிறுவனங்கள் தங்களது அச்சு பதிப்புகளை விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகைகளில் வரும் செய்திகளை பி.டி.எப். போன்ற வடிவங்களில் நகல் எடுத்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்றவற்றின் குழுக்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.  இதனால், பத்திரிகை துறையினருக்கு சந்தாதாரர்கள் மற்றும் டிஜிட்டல் வடிவிலான இ-பேப்பர் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயில் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை கவனத்தில் கொண்ட இந்திய செய்தித்தாள் கழகம் (ஐ.என்.எஸ்.), பத்திரிகை செய்திகளை பி.டி.எப். வடிவங்களில் நகல் எடுத்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிர்வது என்பது சட்டவிரோதம்.  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக செய்தி நிறுவனங்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பெரும் அபராதம் விதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

செய்திகளையோ அல்லது செய்திகளின் ஒரு பகுதியையோ நகல் எடுப்பது சட்டவிரோதம் என்றும் இதற்கு எதிராக அபராதத்துடன் கூடிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்களது ஆப்கள், வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி நிறுவனங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் ஐ.என்.எஸ். கேட்டு கொண்டுள்ளது.

இதுதவிர்த்து, பி.டி.எப். கோப்புகள் மற்றும் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்வதில் வரம்புகள் நிர்ணயிப்பது மற்றும் தனிநபர்களை கண்டறிய பயன்பாட்டாளர் அடையாள குறியீடுகளை சேர்ப்பது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாக பி.டி.எப். கோப்புகளை பதிவிறக்கம் செய்வதில் இருந்து பயன்பாட்டாளர்களை தடுப்பது ஆகியவற்றை மேற்கொள்ளும்படியும் செய்தி நிறுவனங்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

Next Story