மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொரோனா பரவியது எப்படி? - விசாரணை விரைவில் முடியும் என தகவல்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொரோனா வைரஸ் பரவியது எப்படி என்பது தொடர்பான விசாரணை விரைவில் முடியும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
உலகின் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, நமது நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவம் என்ற பெருமைக்குரிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலும் புகுந்து விட்டது.
டெல்லியில் மயூர்விகாரில் உள்ள அந்த படையின் 31-வது பிரிவில், 137 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. மேலும் 6 பேருக் கான முடிவுகள் வர வேண்டியது இருக்கிறது.
டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினுள் கொரோனா வைரஸ் பரவியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்தப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது எப்படி என்பது குறித்து படையின் தலைவரான ஏ.பி. மகேஷ்வரி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதன் முடிவு வெளிவரும்.
31-வது படைப்பிரிவில் கொரோனா வைரஸ் பரவிய விவகாரம், தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோயின் சவாலை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை இயக்குனர் கூறி இருக்கிறார். இந்த படைப்பிரிவை பொறுத்தமட்டில் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 6 பேரது முடிவுகள் வரவேண்டியதிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தப் படையில் 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் உள்ளது. 2 பேர் குணம் அடைந்து விட்டனர்.
எங்கள் படையின் அனைத்துப் பிரிவிற்கும் பொதுவான கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடைமுறைகள், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்கான வழிவகைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைத்து உருவாக்க தளபதிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தலைமை அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து படைத்தளபதிகள் தடையற்று இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எல்லா மூத்த அதிகாரிகளும், பாதுகாப்பான ஆன்லைன் முறை மூலம் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story