இந்தியாவில் வேகமெடுத்தது கொரோனா: 24 மணி நேரத்தில் 194 பேர் பலி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கிவிட்டது. 24 மணி நேரத்தில் 194 பேரை காவு வாங்கியதுடன், புதிதாக 3,875 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கால் பதித்து மெல்ல மெல்ல பரவத் தொடங்கிய கொரோனா, கடந்த 2 நாட்களாக தனது கோர முகத்தை காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை உள்ள இடைப்பட்ட 24 மணி நேரத்துக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்தது.
அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 42,836 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருந்த கொரோனா, நேற்று மாலைக்குள் புதிதாக 3,875 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விவரத்தை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 194 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 98 பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் 35 பேரும், குஜராத்தில் 29 பேரும், மத்திய பிரதேசத்தில் 11 பேரும், உத்தரபிரதேசத்தில் 8 பேரும், ராஜஸ்தானில் 6 பேரும், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா 2 பேரும், சண்டிகார், அரியானா மற்றும் தமிழகத்தில் தலா ஒருவரையும் 24 மணி நேரத்துக்குள் கொரோனா பலி வாங்கி இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 13,161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 31,967 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,541 ஆக உள்ளது. அங்கு 583 பேரின் உயிரையும் இந்த வைரஸ் பறித்துவிட்டது. குஜராத்தில் பாதிப்பு 5,804 ஆகவும், பலி 319 ஆகவும், டெல்லியில் பாதிப்பு 4,898 ஆகவும், பலி 64 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. புதுச்சேரியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக நீடிக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 1,717 பேரும், கர்நாடகாவில் 673 பேரும், கேரளாவில் 502 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story