இந்தியாவில் 548 டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் 548 டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 May 2020 11:00 PM GMT (Updated: 6 May 2020 10:20 PM GMT)

இந்தியாவில் 548 டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் பேரை இந்த வைரஸ் இந்தியாவில் இதுவரை தாக்கி உள்ளது.

அவர்களை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்கள்.

இந்த உயிர் காக்கும் களப்பணியில் அவர்களும் பாதிப்புக்கு ஆளாவது தொடர்கதை ஆகி வருகிறது. இது மருத்துவ பணியாளர்களிடையே மிகுந்த கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் பணியை தொடர்கின்றனர்.

இதுவரை இந்தியாவில் 548 டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு, யூனியன் பிரதேச பணியில் உள்ளவர்கள் ஆவார்கள். தலைநகர் டெல்லியில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று, 69 டாக்டர்களை பாதித்து இருக்கிறது.

நர்சுகளை, மருத்துவ சார்பு பணியாளர்களை பொறுத்தமட்டில் 274 பேர் இந்த வைரசின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசு சார்பில் நடத்தப்படுகிற டெல்லி சப்தர்ஜிங் ஆஸ்பத்திரியில் 7 உறைவிட மருத்துவர்கள், ஒரு பேராசிரியர் உள்பட 13 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஒரு உறைவிட மருத்துவர், 5 நர்சுகள் உள்பட 10 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதே ஆஸ்பத்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிலருக்கும் இந்த வைரஸ் தாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தவிர்த்து டெல்லியில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் ஆஸ்பத்திரிகள் பலவற்றிலும் மருத்துவ பணியாளர்கள் பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

என்னதான் பி.பி.இ. என்று சொல்லப்படக்கூடிய சுய பாதுகாப்பு கருவிகள் அணிந்து கொண்டு பணியாற்றினாலும்கூட, அதையும் தாண்டி கொரோனா வைரஸ் மருத்துவ பணியாளர்களையும் தாக்குவது புரியாத புதிராக உள்ளது.

Next Story