தேசிய செய்திகள்

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை; காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி + "||" + Four killed including Hizbul Mujahideen terror commander Security Forces Action In Kashmir

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை; காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை; காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதி உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஷ்மீரில் கடந்த 2 தினங்களில் ராணுவ கர்னல் உள்பட 8 வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பெய்க்போரா கிராமத்தில் பயங்கரவாத இயக்க முக்கிய தலைவர் ஒருவர் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் அடங்கிய சிறப்பு செயல்பாட்டு பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

அந்த கிராமத்தில் இருந்து வெளியேறும் அத்தனை வழிகளுக்கும் ‘சீல்’ வைத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் நெருங்கியபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் நைக்கூ என்பது தெரியவந்தது.

இந்த இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்த புர்ஹான் வானி கடந்த 2016-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு தளபதியாக ரியாஸ் நைக்கூ பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பல ஆண்டுகளாக பிடிபடாமல் சுற்றித்திரிந்த இவரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.12 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அவர் பாதுகாப்பு படையினரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே இதே மாவட்டத்தில் அவந்திபோரா அருகே உள்ள ஷார்சாலி கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.