கொரோனா பாதிப்புகள் உயருவதால் பரிசோதனைக்கு உரிய விதிமுறைகளில் மாற்றம்-மத்திய சுகாதாரத்துறை


கொரோனா பாதிப்புகள் உயருவதால் பரிசோதனைக்கு உரிய விதிமுறைகளில் மாற்றம்-மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 9 May 2020 8:10 AM GMT (Updated: 9 May 2020 8:10 AM GMT)

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து பரிசோதனைக்கு உரிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை மாற்றம் செய்து உள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 95 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,886ல் இருந்து 1,981 ஆக உயர்வடைந்து உள்ளது.  17 ஆயிரத்து 846 பேர் குணமடைந்தும், 39,834 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ல் இருந்து 59 ஆயிரத்து 662 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் ஏராளமான கொரோனா நோயாளிகள் அறிகுறியற்றவர்களாக உள்ளனர், அதாவது அவர்கள் நோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை என்று நிபுணர்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளியை 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பும் முன்பு கொரோனா பரிசோதனை நடத்தி, அதில் தொற்று இல்லை என்று முடிவு வந்து 24 மணி நேரத்தில் மீண்டும் ஒரு சோதனை செய்து அதிலும் தொற்று இல்லை என்று முடிவு வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பலனாக குணமடைந்த கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் சில மாற்றங்களை மத்திய சுகாதாரத் துறை அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று கடுமையாக பாதித்த நோயாளிகளுக்கு மட்டுமே, வீட்டுக்கு அனுப்பும் முன் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும்.

கொரோனா பாதித்து, ஆனால் அறிகுறிகள் தென்படாத, எந்த பாதிப்பும் ஏற்படாத, மிகக் குறைவான அறிகுறிகளே உள்ள நோயாளிகளை, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பும் போது மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது திருத்தப்பட்டிருக்கும் கொள்கையில், கொரோனா நோயாளிகளை, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலன் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அதற்கேற்ப அடிப்படை விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன.

கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் இருப்பவர்களும், கொரோனா கடுமையாக பாதித்த நோயாளிகளுக்கு மட்டுமே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் முன்பு கொரோனா சோதனை நடத்தி அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

கொரோனா தொற்று லேசான பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடல்வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு போன்றவற்றை அடிப்படையாக வைத்து வீட்டுக்கு அனுப்பலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே குணமடைந்தவர்கள், உடல் வெப்பநிலை அதிகமாக இல்லாமல், 95 சதவீத ஆக்ஸிஜன் நுகர்வு இருப்பவர்களை, 10 நாட்களிலேயே வீட்டுக்கு அனுப்பலாம் என்றும், அவர்களுக்கு மீண்டும் கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்படுவோர், வீட்டில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா  நோய் குறித்து பிற நாடுகளால் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட சுகாதார அமைப்பான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் வழிகாட்டுதல்கள் உருவாகின்றன.வரவிருக்கும் நாட்களில் கடுமையான கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டின் மருத்துவமனைகளின் சுமையை குறைக்க புதிய வழிகாட்டுதல்கள் உதவும் என்று ஒரு அதிகாரி கூறினார்.

Next Story