அபுதாபி, துபாயில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று


அபுதாபி, துபாயில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 May 2020 12:58 PM GMT (Updated: 9 May 2020 12:58 PM GMT)

அபுதாபி மற்றும் துபாயில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

 அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம், கடந்த வியாழக்கிழமை கேரளாவுக்கு 363 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.  இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கேரள அரசு தெரிவித்தது.  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும்  கோழிக்கோடு மற்றும் கொச்சியில் முறையே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கேரளாவில், புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 484 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், 4 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக சர்வதேச போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளுக்கு பணி, கல்வி, சுற்றுலா தேவைகளுக்காக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இத்தகைய நபர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை மே 7 ஆம் தேதி முதல் மத்திய அரசு இயக்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையாக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கை கருதப்படுகிறது. 

Next Story