கொரோனாவால் 59,662 பேர் பாதிப்பு: இந்தியாவில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனாவால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை வெளியான புள்ளி விவரத்தில் ஒரே நாளில் இந்த வைரஸ் தொற்றால் 3,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,662 ஆகவும், பலி எண்ணிக்கை 1,981 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 17,847 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39,834 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் பலியான 95 பேரில், அதிகபட்சமாக மராட்டியத்தில் 37 பேரும், குஜராத்தில் 24 பேரும் இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில் மேற்கு வங்காளத்தில் 9 பேரையும், மத்திய பிரதேசத்தில் 7 பேரையும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4 பேரையும், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 3 பேரையும், டெல்லியில் 2 பேரையும், பஞ்சாப், அரியானாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்துவரும் மராட்டியத்தில் 19 ஆயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு மட்டும் இந்த வைரசின் கோரப்பிடியில் சிக்கி 731 பேர் பலியாகிவிட்டனர். குஜராத்தில் பாதிப்பு 7400-ஐ தாண்டிவிட்டது. தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் 6,318 பேரும், ராஜஸ்தானில் 3,579 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,341 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,214 பேரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் 1,887 பேரையும், பஞ்சாபில் 1,731 பேரையும், மேற்குவங்காளத்தில் 1,678 பேரையும், தெலுங்கானாவில் 1,133 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 823 பேரையும், கர்நாடகாவில் 753 பேரையும், அரியானாவில் 647 பேரையும், பீகாரில் 571 பேரையும், கேரளாவில் 503 பேரையும் கொரோனா தனது கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது.
இந்த எண்ணிக்கை ஒடிசாவில் 271 ஆகவும், சண்டிகாரில் 150 ஆகவும், ஜார்கண்டில் 132 ஆகவும், திரிபுராவில் 118 ஆகவும் உள்ளது. மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது.
Related Tags :
Next Story