நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் உரிய நேரத்தில் நடக்கும் - மக்களவை சபாநாயகர் உறுதி


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் உரிய நேரத்தில் நடக்கும் - மக்களவை சபாநாயகர் உறுதி
x
தினத்தந்தி 11 May 2020 1:00 AM IST (Updated: 11 May 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் உரிய நேரத்தில் நடக்கும் என மக்களவை சபாநாயகர் கூறினார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் நடைபெறும். கொரோனா பிரச்சினையால் இந்த ஆண்டு அது பாதிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் உரிய நேரத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது:-

கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை நடைபெற்றது.

தற்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சோதனையான காலமாக இருந்தாலும் மழைக்கால கூட்டத்தொடர் தடை ஏதும் இன்றி நடைபெறும் என்று உறுதியாக நம்புகிறேன். எனினும் அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தும் உள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தற்போது உள்ளது போல சமூக இடைவெளி கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டால் கூட்டம் நடத்துவது எந்த வகையில் சாத்தியம் என்ற கேள்விக்கு நேரம் வரும் போது, அந்த சூழ்நிலையை பொறுத்து இதற்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நிவாரண பணிகளுக்காக மக்களவையில் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வெற்றிகரமாக செயல்படுவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஆற்றிவரும் பணி மிகவும் மனநிறைவு அளிப்பதாகவும் கூறினார்.

மத்தியில் உள்ள தலைமை இந்த பிரச்சினையை மிகவும் திறம்பட கையாண்டு வருகிறார்கள் என்றும், கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறார்கள் என்றும் கூறினார்.

Next Story