கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க 5 நட்பு நாடுகளுக்கு இந்தியா மருத்துவ உதவி
கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க 5 நட்பு நாடுகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. மருத்துவ குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகின் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்துள்ளது. பல நாடுகள் அவற்றை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
அந்த வகையில் இந்தியா 5 நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த நாடுகள் மாலத்தீவுகள், மொரீசியஸ், மடகஸ்கார், கொமொரோஸ், சிசெல்ஸ் ஆகியவை ஆகும். இந்த நாடுகள், இந்தியாவிடம் உதவி கோரி வேண்டுகோள் விடுத்தன.
அந்த நாடுகளின் வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இந்தியாவின் போர்க்கப்பல் களில் ஒன்றான கேசரி, அத்தியாவசிய மருந்து பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்கிறது.
அத்துடன் 2 மருத்துவ குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மொரீசியஸ் மற்றும் கொமொரோஸ் நாட்டு அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு உதவியாக மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.
மேலும், மொரீசியஸ், மடகாஸ்கர், கொமொரோஸ், சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளும், மாலத்தீவுகளுக்கு 600 டன் உணவுப்பொருட்களும் எடுத்துச்சென்று வழங்கப்படுகின்றன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மொரீசியஸ் நாட்டுக்கு ஆயுர்வேத மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மடகாஸ்கர், கொமொரோஸ் நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
மொரீசியஸ், மாலத்தீவுகள், சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story