சிக்கிம் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதல்


சிக்கிம் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதல்
x
தினத்தந்தி 10 May 2020 11:00 PM GMT (Updated: 10 May 2020 10:18 PM GMT)

சிக்கிம் மாநிலத்தில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

புதுடெல்லி, 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கிலோ மீட்டர் நீள எல்லை உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசலபிரதேச மாநிலம் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனால் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதாவது சிறுசிறு மோதல்கள் எற்படுவது உண்டு.

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் எல்லையில் அணிவகுத்ததால் அங்கு 73 நாட்கள் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அது முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவத்துக்கு பிறகு 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனா சென்ற பிரதமர் மோடி அங்குள்ள உகான் நகரில் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தணிப்பது என்றும், இதற்கு இரு நாடுகளும் தங்கள் ராணுவத்துக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குவது என்றும், தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை வந்த ஜின்பிங், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்துவது என்று இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

இந்த நிலையில், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நகுலா கணவாய் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டு உள்ளது.

எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் அணிவகுத்து நின்ற சுமார் 150 வீரர்களுக்கு திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பிலும் சிலர் காயம் அடைந்தனர். அதன்பிறகு அங்குள்ள அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு தரப்பு வீரர்களும் சமாதானம் அடைந்தனர். அதன்பிறகு அங்கு அமைதி திரும்பியது.

இந்த தகவலை நேற்று டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லடாக்கில் பான்கோங் ஏரி பகுதியில் உள்ள எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அதன்பிறகு அதேபோன்ற ஒரு சம்பவம் இப்போது சிக்கிம் எல்லையில் நடந்து இருக்கிறது.

Next Story