கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் கொரோனா தொற்று இல்லை - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிவிப்பு


கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் கொரோனா தொற்று இல்லை - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2020 4:45 AM IST (Updated: 11 May 2020 4:19 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மந்தோலி பகுதியில் அமைந்துள்ள கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

புதுடெல்லி, 

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிப்பாதையில் நாம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 12 நாட்கள் என தொடர்கிறது.

குணம் அடைவோர் விகிதாசாரம் 30 சதவீதத்தை தாண்டி விட்டது. பாதிப்புக்குள்ளான சுமார் 60 ஆயிரம் பேரில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இறப்பு சதவீதம் 3.3 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தாக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றினை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கு இதுவரை 72 லட்சம் என்-96 முக கவசங்களையும். 36 லட்சம் சுய பாதுகாப்பு கருவிகளையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இதுவரை இல்லாத வகையில் 1,511 கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Next Story