மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை- உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனையில் பங்கேற்பு
ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்
புதுடெல்லி,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 1½ மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பிற்பகல் 3 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பிறகு பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துவது இது 5-வது தடவை ஆகும்.
தமிழகம் சார்பில் இந்தக்கூட்டத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் உதயகுமார், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் ஊரடங்கை விலக்கிக் கொள்வதா? அல்லது சில கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பதா? எந்தெந்த பகுதிகளில் நீட்டிப்பது? என்பது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story