இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி ஆவேசம்


இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்- பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி ஆவேசம்
x
தினத்தந்தி 11 May 2020 11:25 AM GMT (Updated: 11 May 2020 11:25 AM GMT)

இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள போதிலும்,  கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. இதனால், ஊரடங்கு மேற்கொண்டு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. 

இந்த நிலையில்,  பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசை கடுமையாக சாடியதாக தகவல்கள் கூறுகின்றன.  மம்தாபானர்ஜி கூறுகையில், “ கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். 

மேற்குவங்காளத்தை  பொறுத்தவரையில் வெளிநாடுகளையும், பெரிய மாநிலங்களயும் எல்லையாக கொண்டுள்ளது. அதனால்  கொரோனா பரவலை தடுப்பதில் கடுமையான சவால்கள் உள்ளன. இருப்பினும் மாநில அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. இந்த இக்கட்டான தருணத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது. 

மத்திய அரசு அனைத்து மாநிலங்களயும் சமமாக நடத்த வேண்டும். சில மாநிலங்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. ஏற்கனவே எழுதப்பட்ட ”ஸ்க்ரிப்ட்” அடிப்படையில் மத்திய அரசு பணியாற்றுகிறது.  எங்களின் கருத்துக்களை யாருமே ஒருபோதும் கேட்பதில்லை” என்று தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

Next Story