15 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு மாலை 6 மணி தொடங்கும்- ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு


15 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு மாலை 6 மணி தொடங்கும்- ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2020 5:08 PM IST (Updated: 11 May 2020 5:08 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இருந்து சென்னை உள்பட 15 நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.

புதுடெல்லி, 

கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரெயில் போக்குவரத்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் தொடங்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.   ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் 12-ந் தேதியில் (நாளை) இருந்து ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது நாளை டெல்லியில் இருந்து 15 ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட உள்ளன.  

இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், ஆமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவரம், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.

இந்த ரெயில்களில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள முகவரியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 4 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும் இணையதளம் முடங்கியதாக தெரிகிறது. 

இதையடுத்து, டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கான நேரத்தை ரெயில்வே மாற்றியுள்ளது. அதாவது இன்று மாலை  6 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. 


Next Story