டாஸ்மாக் விவகாரம்- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்


டாஸ்மாக் விவகாரம்- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 11 May 2020 6:52 PM IST (Updated: 11 May 2020 6:52 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், தனி மனித இடைவெளி உள்ளிட்ட  நிபந்தனைகளை  மீறியதால், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.   

ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அந்த விற்பனையை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு, வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. நாளை காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 

முன்னதாக,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story