தமிழகத்துக்கு, 31-ந் தேதி வரை ரெயில், விமான சேவை வேண்டாம் - பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தமிழகத்துக்கு 31-ந்தேதி வரை ரெயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று, பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அவருடன் உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சுகாதார துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இருந்தபடி ஆலோசனையில் பங்கேற்றார். இதேபோல் மற்ற மாநில முதல்-மந்திரிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்துக்கு 31-ந்தேதி வரை ரெயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வு உத்தரவுகளின்படி, தமிழகத்தில் சில தொழில்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 10-ந்தேதிவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 37 மாதிரிகளில் சோதனை செய்ததில் 7,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சந்தேகத்துக்குரிய 59 ஆயிரத்து 610 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தீவிர மருத்துவ நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக தமிழகத்தில் நோயாளி இறப்பு சதவீதம் 0.67 என்ற குறைந்த அளவில் உள்ளது. இந்தியாவிலேயே இங்குதான் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது.
கொரோனா பரிசோதனைக்கான பி.சி.ஆர். கருவிகளை மத்திய அரசு அதிக அளவில் வழங்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இடம் பெயர்ந்து வந்திருந்த 13 ஆயிரத்து 284 தொழிலாளர்களையும், சிகிச்சைக்காக வந்திருந்தவர்களையும் 12 ரெயில்கள் மூலம் திருப்பி அனுப்பி இருக்கிறோம். மேலும் பல தொழிலாளர்கள் உள்ளிட்டோரை, அந்தந்த மாநிலங்களின் விருப்பப்படி 17-ந்தேதிக்குள் 61 ரெயில்கள் மூலம் அனுப்ப திட்டமிட்டு உள்ளோம்.
வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டங்களின் மூலம் 4 விமானங்கள், ஒரு கப்பல் ஆகியவற்றை பெற்று இருக்கிறோம். மாநிலத்தில் தினமும் 134 விவசாய சந்தைகள் மற்றும் 9,200 நடமாடும் சந்தைகள் மூலம் 5,700 டன் காய்கறிகள், பழங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. விவசாய உற்பத்தி பொருட்கள் நேரடியாக நுகர்வோரை சென்றடையும் வகையில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு போக்குவரத்து மானியத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
31-ந்தேதிவரை பொதுவான விமான போக்குவரத்து சேவையை தொடங்கக் கூடாது. 12-ந்தேதியில் இருந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. சென்னையில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால், 31-ந்தேதிவரை மாநிலத்துக்கு ரெயில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தரப்பட்ட ரூ.312 கோடி முழுமையாக செலவழிக்கப்பட்டுவிட்டது. எனவே 2-வது தவணைத் தொகையை பெறுவதற்காக, நிதி உபயோக சான்றிதழை சமர்ப்பித்து இருக்கிறோம். மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக ஏற்கனவே என்னால் வலியுறுத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு மானியத்தை மீண்டும் நினைவூட்டி, அதை உடனே அனுமதிக்க வேண்டுகிறேன்.
2019-20-ம் நிதி ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்ட 33 சதவீத கூடுதல் கடன் உச்சவரம்பை 2020-21-ம் நிதி ஆண்டுக்கும் அனுமதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிதி கமிஷன் பரிந்துரைத்துள்ள 2020-21-ம் ஆண்டுக்கான நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தில் 50 சதவீதத்தை உடனே அனுமதிக்க வேண்டும்.
மருந்துகள், தடுப்பு உபகரணங்களுக்கான செலவு, புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களை அனுப்புவதற்கான செலவு ஆகியவற்றுக்காக தேசிய பேரிடர் நிவாரண தொகையில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். என்.பி.எச்.எச். பயனாளிகள் உள்ளிட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவுதானியம் வழங்கும் வகையில் கூடுதலாக அனுமதிக்க உத்தரவிட வேண்டும். நெல் கொள்முதலுக்கு வசதியாக நெல் அரைவை மானிய தொகை ரூ.1,321 கோடியை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆண்டு கடன் திட்ட இலக்கை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக 2020-21-ம் ஆண்டில் உயர்த்த வேண்டும். அவர்களது கடனை வரும் டிசம்பர் 31-ந்தேதிவரை வரை திருப்பிச் செலுத்தாத வகையில் அவகாசம் வழங்க வேண்டும். இந்த தொழில்களுக்கு புதிய முதலீட்டு நிதி உதவிகளை வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதி ஆதாரமாக ரூ.2,500 கோடி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Related Tags :
Next Story