4 ஆம் கட்ட ஊரடங்கு: பஸ், ரயில், விமான போக்குவரத்து இயங்கும்?
4 ஆம் கட்ட ஊரடங்கின் போது பஸ், ரயில், விமானம் போக்குவரத்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3 முறை இதுவரை கொரோனா காரணமாக ஊரட்ங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் துறைகளின் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதோடு, குறைந்த அளவிலான உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கும் எனவும், அதே சமயம் சர்வதேச விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பாக டெல்லி மெட்ரோ சேவையை துவங்க மத்திய தொழில் பாதுகாப்பு படை வழிமுறைகளை வகுத்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலமாக நிர்ணயிக்கும் வழிமுறைகளில் மாற்றமிருக்காது என்றும், அதே சமயம் குறைந்தபட்ச அளவிலான தடைகளே நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்படும். சிவப்பு மண்டலங்களிலும் அத்தியாவசியமல்லாத பிற பொருட்களையும் டெலிவரி செய்ய இ-வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஊரடங்கில் இந்தியாவில் பெரிய அளவில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்படும். பெரும்பாலான மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் விமான சேவை முக்கியமான நகரங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும். உள்ளூர் விமான சேவை மட்டும் தொடங்கும். வெளிநாட்டு விமான சேவை தொடங்காது. சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படும். இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
பொது ரயில் சேவைகளை தொடங்காமல் மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையை மட்டும் தொடர்ந்து வழங்கும்.
கேப்கள், ஆட்டோக்கள் இயங்கவும் நாடு முழுக்க அனுமதி வழங்கப்படும்
அதே சமயம் தியேட்டர்கள், மால்களும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கோவில்கள், வழிபாட்டு தளங்கள் செயல்பட வாய்ப்புள்ளது.
மக்கள் வெளியே செல்லும் நேரத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று கூறுகிறார்கள். மே 16ம் தேதி இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Related Tags :
Next Story