மத்திய அரசுக்கு விஜய் மல்லையா திடீர் பாராட்டு
20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் தொகுப்பை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள விஜய்மல்லையா, தான் வங்கிகளில் வாங்கியுள்ள கடனை 100 சதவீதம் திருப்பித் தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்
லண்டன்,
நாடறிந்த தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவரை நாடு கடத்தும் வகையில் லண்டன் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பான வழக்கில் ஜாமீன் பெற்றுக் கொண்டு, நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராக லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.ஆனால் இதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை விஜய் மல்லையா நாடியுள்ளார்.
லண்டனில் இருந்தபடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள விஜய் மல்லையா, தன் கடன் பணத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
இது தொடர்பாக விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா நிவாரண நிதித் தொகுப்பு அறிவித்துள்ள இந்திய அரசுக்கு எனது பாராட்டுகள். எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு ரூபாயை இந்திய அரசு அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால், பொதுத் துறை வங்கிகளிடமிருந்து நான் கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பித் தர தயார் என்று தொடர்ந்து சொல்லி வந்தும் அதை உதாசீனப்படுத்துவது சரியா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நிபந்தனையில்லாமல் பணத்தை பெற்றுக் கொண்டு, தம்மீதான வழக்கை முடிக்க வேண்டும் எனவும் மல்லையா கோரியுள்ளார்.
Related Tags :
Next Story