நிதி மந்திரியின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன - காங்கிரஸ் குற்றச்சாட்டு
நிதி மந்திரியின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
சுயசார்பு இந்தியா என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் குறித்த விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினமும், நேற்றும் 2 கட்டங்களாக வெளியிட்டார். அப்போது அவர் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியம் என்பன உள்ளிட்ட பல சிறப்பு நிதி தொகுப்புகளை அறிவித்தார்.
இந்த நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பிரதமர் மோடி நாட்டுக்கு அளித்த வாக்குறுதிகளை விட குறைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனந்த் சர்மா இதுபற்றி கூறுகையில், “பிரதமரின் வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பில் நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தின. ஆனால் நிதி மந்திரியின் அறிவிப்பு அனைத்து நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது. நிதி மந்திரியின் அறிவிப்புகள் ஏமாற்றத்தை தவிர வேறு எதையும் தரவில்லை” கூறினார்.
Related Tags :
Next Story