நாட்டிலேயே முதல் மாநிலமாக பொதுப்போக்குவரத்தை மீண்டும் தொடங்கிய அரியானா!
அரியானாவில் பொதுப்போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
சண்டிகார்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டது. பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு சில தளர்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் சில தளர்வுகளை மாநில அரசுகள் அளித்து வருகின்றன.
இந்த நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக அரியானா மாநிலம் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை அரியானா மாநிலம் நேற்று தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரியானாவின் போலீஸ் டிஜிபி மனோஜ் யாதவ் கூறுகையில், அரியானாவில் வெளி மாநிலத்தவர்கள் பலரை பேருந்து மூலமாக அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றோம். ஆனால் அரியானாவுக்கு உள்ளேயே பல மாவட்டங்களில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது' என்றார்.
பேருந்துக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் செய்யப்பட வேண்டும். இடையில் எந்த இடத்திலும் பேருந்து நிறுத்தப்படாது.
அரியானாவுக்குள் 20 வழித்தடங்களில் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏசி இல்லாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்துக்குள் 52 பேர் வரையில் சாதாரண நாட்களில் அமரலாம். ஆனால் சமூக இடைவெளி கருதி 30 பயணிகள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர்” என்றார்.
அரியானாவில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் பணியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆயிரம் தொழிற்சாலைகள் பணியை கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளன.
Related Tags :
Next Story