சீனாவை முந்திய இந்தியா: கொரோனா பாதிப்பு 86 ஆயிரத்தை நெருங்கியது


சீனாவை முந்திய இந்தியா: கொரோனா பாதிப்பு 86 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 17 May 2020 4:45 AM IST (Updated: 17 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா முந்திவிட்டது. நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,752 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, சுமார் 46 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி உள்ள கொரோனா, 3 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் வல்லரசு நாடான அமெரிக்காவே ஆட்டம் கண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்த கொரோனா அங்கும் லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த வைரசின் பிறப்பிடமான சீனாவில் இந்த பாதிப்பு 83 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு 4,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சீனாவை அண்டை நாடாக கொண்ட நம் நாட்டிலும் கொரோனா கால் பதித்து மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா 3,920 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970-ல் இருந்து 85,940 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திவிட்டது இந்தியா.

இங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மராட்டியமே தொடர்ந்து இருந்து வருகிறது. அங்கு மட்டும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,100 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 1,576 ஆகவும் உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 10,585 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் 9,931 பேரும், தேசிய தலைநகர் டெல்லியில் 9,333 பேரும், ராஜஸ்தானில் 4,924 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,595 பேரும், உத்தரபிரதேசத்தில் 4,140 பேரும் மேற்குவங்காளத்தில் 2,576 பேரும், ஆந்திராவில் 2,355 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பஞ்சாபில் 1,932 பேரையும், தெலுங்கானாவில் 1,454 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே 11 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த பட்டியலில் புதிதாக ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பீகார் இணைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அரியானாவில் 862 பேரும், ஒடிசாவில் 737 பேரும், கேரளாவில் 587 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 300-க்கும் குறைவாக உள்ளது.


Next Story