மத்திய பிரதேசத்தில் துயரம்; புலம்பெயர் தம்பதி உள்பட 4 பேர் விபத்தில் சிக்கி பலி


மத்திய பிரதேசத்தில் துயரம்; புலம்பெயர் தம்பதி உள்பட 4 பேர் விபத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 17 May 2020 10:55 AM IST (Updated: 17 May 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் லாரி மோதியதில் புலம்பெயர் தம்பதி உள்பட 4 பேர் பலியான துயர சம்பவம் நடந்து உள்ளது.

இந்தூர்,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.  வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.  ஊரடங்கை முன்னிட்டு வேலைவாய்ப்பின்றி, வருவாயும் இன்றி, கையில் இருந்த பணமும் செலவான நிலையில், தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது என அவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், ஊரடங்கால் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பலர் சரக்கு வாகனங்களில் பயணித்தும், பலர் கால்நடையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றும் தங்களது ஊரை அடைகின்றனர்.  அவர்களில் சிலர் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என தங்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்கின்றனர்.

இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு ரெயில்களில் அவர்களை அனுப்பி வைத்து வருகிறது.  இது தவிர்த்து அவர்களுக்கான உணவு தேவையையும் பூர்த்தி செய்கிறது.  இதனால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை அடைந்த திருப்தியில் உள்ளனர்.  அவர்களுக்கான பயண செலவுகளை ஏற்கவும் சில மாநில அரசுகள் முன்வந்தன.

எனினும், ஊருக்கு திரும்புவதில் காலதாமதம் ஏற்படும் நிலையில், அதனை தவிர்க்க, சிலர் கிடைத்த வாகனங்களை பிடித்து பயணம் செய்கின்றனர்.

இதேபோன்று மராட்டியத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் இந்தூர் நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.  அவர்களில் 4 பேர் மீது பர்வானி என்ற இடத்தில் லாரி ஒன்று மோதியது.  இந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் மற்றும் அவரது மனைவி மற்றும் 2 பேர் என 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து உள்ளது.  ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் புறப்பட்டு சென்றுள்ளனர்.  அவர்களது வாகனம் உத்தர பிரதேசத்தின் ஆரையா என்ற பகுதியில் வந்தபொழுது, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மற்றொரு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர்.  பலர் காயமடைந்தனர்.  அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  இவர்களில் பலர் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள்.

கடந்த வாரம் மராட்டியத்தில் 16 தொழிலாளர்கள் ரெயில் மோதி பலியானார்கள்.  கடந்த 13ந்தேதி இரவில், மராட்டியத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபொழுது, மத்திய பிரதேசத்தின் குணா என்ற பகுதியில் எதிரே வந்த பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில், தொழிலாளர்கள் 8 பேர் பலியாகினர்.  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதேபோன்று அதே நாளில் நடந்த மற்றொரு துயர சம்பவத்தில், பஞ்சாபில் இருந்து பீகாரிலுள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று மோதியது.  இதில், 6 பேர் பலியாகினர்.

Next Story