புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஊரடங்கு காரணமாக 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறியிருந்தது. ஊரடங்கு, வேலை இழப்பு, சமூக இடைவெளி ஆகியவை காரணமாக, இந்தியாவில், கோடிக்கணக்கான உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளே, கொரோனா பரவலுக்கும் காரணமாக அமைந்து விட்டது.
குறிப்பாக, இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை அமலுக்கு வருவதற்கு முன்பு, ஓரிரண்டு நாட்களில், சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தொழிலாளர்கள், நகரங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர் என அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களில் இருந்து அவர்களை பாதுகாக்க சுகாதார பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். வங்கிக்கணக்கில் பணம் போடலாம். இதர சமூக திட்டங்களை பயன்படுத்தி உதவலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி இன்று வெளியிட்டார். அவர் கூறும்பொழுது, வேலைவாய்ப்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதியானது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதனால், சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்த நிதி உதவும். புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சேர்க்க உதவும் ஷ்ரமிக் சிறப்பு ரெயில்களுக்கான 85 சதவீத செலவை மத்திய அரசு ஏற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story