3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி


3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி
x
தினத்தந்தி 18 May 2020 4:15 AM IST (Updated: 18 May 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,926 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஊரடங்கின் கடைசி நாளில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்துக்குள் அதிகபட்சமாக 4,987 பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி இருக்கிறது இந்த கொரோனா.

இதற்கு முன்பு கடந்த 11-ந் தேதி 4,213 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதே, 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 4,987 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், புதிதாக 120 பேரின் உயிரையும் பறித்துள்ளது இந்த கொரோனா வைரஸ். இதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 67 பேர். குஜராத்தில் 19 பேரும், உத்தரபிரதேசத்தில் 9 பேரும், மேற்குவங்காளத்தில் 7 பேரும், டெல்லியில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், தமிழகத்தில் 3 பேரும், அரியானாவில் 2 பேரும், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவரையும் 24 மணி நேரத்துக்குள் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

கொரோனா 3 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் மராட்டியத்தில் மட்டும் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அங்கு பலி எண்ணிக்கை 1,135 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 11,224 பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி உள்ள கொரோனா, 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது. குஜராத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு 625 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

டெல்லி- 9,333 (129), ராஜஸ்தான்- 4,960 (126), மத்திய பிரதேசம்- 4,789 (243), உத்தரபிரதேசம்- 4,528 (104), மேற்கு வங்காளம்- 2,576 (232), ஆந்திரா- 2,355 (49), பஞ்சாப்- 1,946 (32), தெலுங்கானா 1,509 (34), பீகார்- 1,179 (7), ஜம்மு-காஷ்மீர் 1,121 (12), கர்நாடகா- 1,092 (36), அரியானா- 887 (13), ஒடிசா- 737 (3), கேரளா- 587 (4).

ஜார்கண்ட்- 217 (3), சண்டிகார்- 191 (3), திரிபுரா- 167, அசாம்- 92 (2), உத்தரகாண்ட்- 88 (1), இமாசலபிரதேசம்-78 (3), சத்தீஸ்கார்- 67, லடாக்-43, அந்தமான்-நிகோபர் தீவு- 33, கோவா-17, மேகாலயா 13 (1), புதுச்சேரி- 13 (1), மணிப்பூர்-7, தாதர்-நாகர் ஹாவேலி- 1, மிசோரம்-1, அருணாசல பிரதேசம்-1.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34,108 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளதாகவும், 53,946 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story