பொருளாதார மீட்பு நடவடிக்கை: பொதுத்துறையில் தனியாருக்கு அனுமதி; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பொதுத்துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி,
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து பொருளாரத்தை மீட்கும் வகையில், ‘தற்சாற்பு இந்தியா’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங் களை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த திட்டங்கள் பற்றிய விவரங்களை கடந்த புதன்கிழமை முதல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து வந்தார்.
நேற்று முன்தினம் 4-வது கட்டமாக அடிப்படை கட்டமைப்புகளை சீரமைப்பதற்காக திட்டங்களை அறிவித்த அவர், நேற்று 5-வது மற்றும் இறுதி கட்டமாக நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பான திட்டங்களை அறிவித்தார்.
அப்போது, ஏழைகள் பசியாற உணவு அளிப்பது அரசின் கடமை என்று கூறிய நிர்மலா சீதாராமன், கொரோனா ஏற்படுத்திய நெருக்கடி சூழலை வாய்ப்புகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மே 18-ந் தேதி வரை 8.19 கோடி விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் தலா ரூ.2,000 செலுத்தப்பட்டு இருப்பதாகவும், ஜன்தன் வங்கி கணக்கு மூலம் 20 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.10 ஆயிரத்து 25 கோடி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், 2.2 கோடி தொழிலாளர்கள் ரூ.3,950 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி பெற்று இருப்பதாகவும் கூறிய அவர், ஏழைகளுக்கு உணவுப் பொருள் கிடைப்பதை மத்திய-மாநில அரசுகள் உறுதி செய்யும் என்றும் அப்போது கூறினார்.
6.81 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், 12 லட்சம் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்கூட்டியே பணத்தை பெற்று இருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறப்பு ரெயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும் என்றும் கூறினார்.
பின்னர் 7 துறைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு இதுவரை ரூ.4,113 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
* அரிசி, கோதுமை, பருப்பு அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
* தொழில் புரிவதை எளிமையாக்க அடுத்தகட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.
* மருத்துவம், சுகாதார பணியாளர்களை பாதுகாக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
* உடல் பாதுகாப்பு கவசங்களை தயாரிக்கும் 300 நிறுவனங்கள் நம் நாட்டில் இயங்கி வருகின்றன.
* இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கொரோனா பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
* கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்கு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு உள்ளது.
* வர்த்தக சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
* கொரோனா தொடர்பான ஆய்வுகள் மற்றும் பரிசோதனை கருவிகளுக்காக ரூ.550 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
* 11.08 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
* மருத்துவ பணியாளர்களுக்கு 51 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள், 87 லட்சம் என்95 முக கவசங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
* பள்ளிக் கல்விக்காக ஏற்கனவே 3 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கும் நிலையில் மேலும் 12 சேனல்கள் தொடங்கப்படும்.
* ஆன்லைன் கல்வி முறைக்கான ‘பி.எம். இ-வித்யா’ திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 12 தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும்.
* மே 30-ந் தேதி முதல் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் படிப்பை தொடங்க அனுமதிக்கப்படும்.
* பார்வை, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு டிஜிட்டல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* ‘இ வித்யா தீஷா’ திட்டத்தின் கீழ் ‘ஒரே தேசம்-ஒரே கல்வி’ திட்டம் செயல்படுத்தப்படும்.
* இ-பாடசாலை இணையதளத்தில் மேலும் 200 புத்தகங்கள் சேர்க்கப்படும்.
* ‘ஸ்வயம் பிரபா’ சேனல் மூலம் ஆன்லைன் முறையிலான கற்றல் (இ-லேர்னிங்) ஊக்குவிக்கப்படும்.
* மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உளவியல் ரீதியான ஆதரவை அளிக்க ‘மனோதர்பன்’ என்ற திட்டம் உடனடியாக தொடங்கப்படும்.
* சொத்து பதிவு எளிமை ஆக்கப்படும்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் உற்பத்தி அதிகரித்து கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.
* ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
* மாவட்ட மருத்துவமனைகளில் தொற்றுநோய் பிரிவு ஏற்படுத்தப்படும்.
* பொதுசுகாதார செலவு அதிகரிக்கப்படும்.
* கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரி செய்யும் வகையில் திவால் நடவடிக்கை எடுப்பது ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்படுகிறது.
* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும். அதன்படி சிறப்பு திவால் தீர்வு முறைகள் விரைவில் வகுக்கப்படும்.
* 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டும் நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்படும்.
* கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட கடன்கள் வாரா கடன்களாக வரையறுக்கப்படாது.
* சிறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மீதான அபராதம் குறைக்கப்படும்.
* நிறுவனங்களின் 7 விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன.
* தொழில்நுட்ப பிரச்சினையால் ஏற்படும் தவறுகளுக்காக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது. வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் நீதிமன்றம் மூலம் காலக்கெடுவை நீட்டிக்கலாம்.
* குறிப்பிட்ட துறையில் குறைந்தது ஒரு பொதுத்துறை நிறுவனம் இருக்கும். அதில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
* குறிப்பிட்ட சில துறைகளை தவிர்த்து பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும்.
* பொது முக்கியத்துவம் வாய்ந்த துறை எது என்பது பற்றி அறிவிப்பாணை வெளியிடப்படும்.
* தனியார் முதலீடு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி அரசு அறிவிக்கும்.
* மாநில பேரிடர் மீட்பு நிதி வசூலில் ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.11,092 கோடி வழங்கப்பட்டது.
* ஏப்ரல் மாதத்தில் மாநிலங்களுக்கு வருவாய் பங்காக ரூ.46 ஆயிரத்து 38 கோடி வழங்கப்பட்டது.
* வருவாய் பற்றாக்குறை மானியமாக ஏப்ரல், மே மாதங்களில் ரூ.12,390 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது
* மாநிலங்கள் கடன் பெறுவதற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜி.டி.பி.) 3 சதவீதமாக இருந்த வரம்பு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
* கடன் வரம்பு உயர்வால் மாநிலங்கள் கூடுதலாக 4.28 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட முடியும்.
* ஏப்ரல் 22-ந் தேதி வரை வரிச்சலுகை வருவாய் இழப்பு ரூ.7,022 கோடி.
* வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடனுதவி ரூ.30 ஆயிரம் கோடி.
* வருங்கால வைப்பு நிதி சலுகைக்காக ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.
மேற்கண்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
முதல் நாளில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை திட்டங்களுக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரத்து 550 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், 2-வது நாளில் வெளிமாநில தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், 3-வது நாளில் விவசாயம், பால், மீன்வளத்துறை தொடர்பான திட்டங்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், 4-வது மற்றும் 5-வது நாளில் 48 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஏற்கனவே பொருளாதார ஊக்குவிப்புக்காக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளின் மூலம் 8 லட்சத்து 1,603 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறிய அவர், கொரோனாவுக்கு முன்னரே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 800 கோடி செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் இந்த திட்ட மதிப்பீடு ரூ.20 லட்சத்து 97 ஆயிரத்து 503 கோடி என்றும் கூறினார்.
Related Tags :
Next Story