கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டம்


கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டம்
x
தினத்தந்தி 19 May 2020 3:30 AM IST (Updated: 19 May 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

கேரளா, ஆந்திராவில் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 4-ம் கட்ட ஊரடங்கு விதிமுறைகளில், பஸ் போக்குவரத்தை தொடங்குவது பற்றி மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அந்த அடிப்படையில் கேரளா அரசு பஸ் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில போக்குவரத்து துறை மந்திரி ஏ.கே.சுசீந்திரன், ‘ஆரம்பத்தில் பொது போக்குவரத்து உள்மாவட்ட சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளுக்கு பஸ் இயக்கப்படாது’ என்று தெரிவித்தார். மேலும், ‘பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும்’ என்று கூறிய அவர், ‘மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பஸ்சைவிட, ரெயில்களே சிறந்தது’ என்றும் தெரிவித்தார்.

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், மத்திய அரசு வழிகாட்டிய விதிமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி, மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலங்களுக்கு இடையேயும் பஸ் போக்குவரத்தை தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல டெல்லியிலும், மேற்கு வங்காளத்திலும் போக்குவரத்தை தொடங்க அம்மாநில அரசுகள் முடிவு செய்து உள்ளன.

Next Story