தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை: எடியூரப்பா அறிவிப்பு
தமிழகம், கேரளாவை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“நாட்டில் மராட்டியம், குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த 4 மாநிலங்களை சேர்ந்தவர்கள், கர்நாடகத்திற்குள் வந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள். வருகிற 31-ந் தேதி வரை கர்நாடகத்திற்குள் நுழைய அவர்களுக்கு தடை விதித்து முடிவு செய்துள்ளோம். ஆனால் படிப்படியாக அனுமதிப்போம்.
மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் நோக்கத்தில் கர்நாடகத்தில் பஸ்கள் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை(இன்று) காலை முதல் தொடங்கும். ரெயில்களை கர்நாடகத்திற்குள் இயக்கலாம். சலூன்கள், பல் மருத்துவ மையங்களை திறக்கலாம் என்று எடியூரப்பா கூறினார்.
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, “மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் மாநிலத்தில் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் அந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்களை அனுமதிக்கக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்” என்றார்.
Related Tags :
Next Story