உத்தர பிரதேசத்தில் டிரக் கவிழ்ந்து விபத்து- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலி


உத்தர பிரதேசத்தில் டிரக் கவிழ்ந்து விபத்து- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 19 May 2020 9:29 AM IST (Updated: 19 May 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியாகினர்.

மஹோபா,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலையிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், பல நூறு கி.மீட்டர்களுக்கு நடந்தே பல தொழிலாளர்கள் சென்றதைக் காண முடிந்தது. அதேபோல், டிரக்குகள் போன்ற சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டனர். 

இதையடுத்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சிறப்பு ரெயில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.  எனினும், சில இடங்களில் தொழிலாளர்கள் நடந்து செல்லும் சோகம் தொடர்கிறது. 

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி - மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில், டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்,  டெல்லியில் இருந்து கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். டிரக்கின் டயர் வெடித்ததே விபத்திற்கு காரணம் என்ரு சொல்லப்படுகிறது.  பலியான மூன்று பேரும் பெண் தொழிலாளர்கள் ஆவர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  கடந்த 10 தினங்களில்,  சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 


Next Story