ஆம்பன்: வங்க கடலில் 21 வருடங்களுக்கு பின் உருவாகியுள்ள அதிதீவிர 2வது சூப்பர் சூறாவளி


ஆம்பன்:  வங்க கடலில் 21 வருடங்களுக்கு பின் உருவாகியுள்ள அதிதீவிர 2வது சூப்பர் சூறாவளி
x
தினத்தந்தி 19 May 2020 5:51 PM IST (Updated: 19 May 2020 5:51 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பன் புயல் 21 வருடங்களுக்கு பின் வங்க கடலில் உருவாகியுள்ள அதிதீவிர 2வது சூப்பர் சூறாவளி ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, நாளை மதியத்தில் இருந்து மாலைக்குள் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது.  புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய பகுதிகளான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதனுடன், ராணுவம், விமானம், கடற்படை மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த போதிய எண்ணிக்கையிலான குழுக்களும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளவும் மற்றும் மாநில அரசுக்கு துணையாக செயல்படவும் தயார் நிலையில் உள்ளன.

ஆம்பன் புயல் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா கூறும்பொழுது, கடந்த 1999ம் ஆண்டுக்கு பின் வங்க கடலில் உருவாகியுள்ள அதிதீவிர 2வது சூப்பர் சூறாவளி இதுவாகும்.

கடலில் இதன் வேகம் மணிக்கு 200 முதல் 240 கி.மீட்டர் வரை உள்ளது.  வடக்கு, வடமேற்கு திசை நோக்கி சூறாவளி பயணிக்கிறது.  இந்த சூறாவளியால் மேற்கு வங்காளத்தில், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட கூடும்.

கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும்.  இது மணிக்கு 135 கி.மீட்டர் வரை வேகமெடுக்கும் என தெரிவித்து உள்ளார்.

Next Story