கொரோனா பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் புதிய வைரஸ்: சிபிஐ எச்சரிக்கை
கொரோனா பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் புதிய வைரஸிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவின் தாக்கம், உலகம் முழுவதும், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள், வங்கி பணிகள், வர்த்தக பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை, ஆன்லைனில் மட்டுமே நடந்து வருகின்றன.
இந்தநிலையில் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட இணையதள வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருவதாக சி.பி.ஐ எச்சரித்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.
கொரோனா தொற்று தொடர்பான விபரங்களைப் பெற குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கும் செய்யும்படி பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. அதனை யாரவரது பதிவிறக்கம் செய்தால் அதில் மறைந்துள்ள ‘செர்பியரஷ் ட்ரோஜன்’ எனும் இணையதள வைரஸ் கணினி அல்லது செல்போனில் புகுந்துகொள்ளும்.
அதன் மூலம் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களையும் ரகசிய குறியீடுகளையும் திருட முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆகவே கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெயரில், ஆன்லைன் பண மோசடி மற்றும் சைபர் குற்றங்கள் நடப்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி, உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story