அலுவலகங்களில் கொரோனா தொற்று இருந்தால் மூட வேண்டாம்: மத்திய அரசு
கொரோனா தொற்று இருந்தால் அலுவலகங்களை மூட வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகள் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கொரோனா தனக்கு எதிராக போடப்படும் அத்தனை தடைகளையும் தகர்த்து எறிந்துவிட்டு, பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்,
ஒன்றிரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் அதிக அளவில் பாதிப்பு இருந்தால், கிருமிநீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் அலுவலகத்தை மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் அலுவலகம் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story