புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர பிரியங்கா அனுப்புவதாக கூறிய ஆயிரம் பஸ்கள் குறித்து சர்ச்சை


புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர பிரியங்கா அனுப்புவதாக கூறிய ஆயிரம் பஸ்கள் குறித்து சர்ச்சை
x
தினத்தந்தி 20 May 2020 4:15 AM IST (Updated: 20 May 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர காங்கிரஸ் கட்சி அனுப்புவதாக கூறிய ஆயிரம் பஸ்கள் பட்டியலில், கார், ஆட்டோ, இருசக்கர வாகன பதிவெண்கள் இருப்பதாக உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவது தொடர்பாக பா.ஜனதா-காங்கிரஸ் இடையே மோதல் நடந்து வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர காங்கிரஸ் கட்சி ஆயிரம் பஸ்களை அனுப்ப தயாராக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியிருந்தார். அதை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக்கொண்டார்.

ஆயிரம் பஸ்களையும் லக்னோவுக்கு 19-ந் தேதி (நேற்று) காலை 10 மணியளவில் அனுப்பி வைக்குமாறு பிரியங்காவின் தனி செயலாளருக்கு உத்தரபிரதேச அரசு மின்னஞ்சல் அனுப்பியது.

ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள், உத்தரபிரதேச எல்லையில் காத்துக் கிடப்பதால், அங்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்று தனி செயலாளர் பதில் அளித்தார்.

அதை உத்தரபிரதேச அரசு ஏற்றுக்கொண்டது. காசியாபாத் மாவட்டத்தில் 500 பஸ்களையும், நொய்டா மாவட்டத்தில் 500 பஸ்களையும் ஒப்படைக்குமாறு கூறியது. மேலும், பஸ்களின் தகுதியை பரிசோதித்து பயன்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களை கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே, முதல்-மந்திரியின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் நேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். காங்கிரஸ் கட்சி பட்டியலில் இடம்பெற்ற பஸ்களின் பதிவெண்களை பரிசோதித்தபோது, அவை கார், ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்களின் பதிவெண்களாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரு கார், ஒரு ஆம்புலன்ஸ், 4 ஆட்டோக்களின் பதிவெண்களையும் அவர் வெளியிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார். உ.பி. அரசுக்கு சந்தேகம் இருந்தால், எல்லையில் நேரடியாக பார்த்து பரிசோதித்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்‘ பதிவில், காங்கிரஸ் கட்சியிடம் ஆயிரம் பஸ்கள் இருந்தால், வீடு திரும்பும் ஆவலில் தொழிலாளர்கள் குவிந்துள்ள லக்னோவுக்கு அவற்றை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story